உங்கள் வீட்டிலிருந்தே எளிதாக செய்யக்கூடிய சுய தொழில் ஐடியாக்கள்

Table of Contents

Share this article

நீங்கள் தினசரி 8 மணி நேர வேலை செய்து கொண்டிருந்தவரா? அல்லது வேலை வாய்ப்பு அமையாமல் வீட்டில் இருப்பவரா? ஒரு சொந்த தொழில் தொடங்குவது உங்கள் நேரத்தை பயனுள்ளதா மாற்றி கூடுதல் வருமானத்தையும் தரும் என நினைக்கிறீர்களா? அந்த கூடுதல் வருமானம் உங்கள் மாதாந்திர வீட்டுச் செலவுகளுக்கு உதவுமல்லவா? 

சமீப காலங்களில் சுய தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை 15% அதிகமாகியுள்ளது என தெரியுமா? ஒரு தொழிலை தொடங்குவதற்கு வயது வரம்பு இல்லையென்றாலும் 18-40 வயதிற்குட்பட்டவர்கள் ஒரு தொழிலை தொடங்கி அதை வெற்றிகரமாக கொண்டு செல்கிறார்கள் என்பது தெரிகிறது. 

ஒரு தொழில் தொடங்க வேண்டுமென்ற ஆவல் இருந்தாலும் என்ன செய்ய வேண்டும் என அறியாமல் நீங்கள் தவித்திருப்பீர்கள். குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை கொடுக்கும் தொழிலையே பலரும் விரும்புவார்கள். வேகமாக வளரும் தொழிலே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்.

கவலை வேண்டாம்! உங்கள் கனவை நனவாக்குவதே எங்கள் பொறுப்பு. உங்கள் வீட்டிலிருந்தே தொடங்கக்கூடிய தொழில்களை பற்றி அறிய இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

சிறு தொழில்களில் கோவிட்-19 இன் தாக்கம்

2020 ஆம் ஆண்டு அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்தது. உலகம் மீண்டும் சீரான பாதையில் செல்ல இன்னும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறது. குழப்பங்கள் மற்றும் பணிநீக்கங்களுக்கு மத்தியில், பலர் தங்கள் வீட்டில் இருந்தபடியே வியாபாரம் செய்யத் தொடங்கினர். சுவாரஸ்யமாக, அவை செழித்து வளர்ந்தன!

இது போன்ற கடினமான தருணங்களில் மக்கள் பல விஷயங்களை உள்வாங்க ஆரம்பித்தனர். மக்களுக்கு இயல்பை விட அதிக நேரம் கிடைத்தது. அது நிச்சயமாக அதிசயங்களைச் செய்தது. கோவிட்-19 இந்தியாவைத் தாக்கியபோது, இந்தியப் பொருளாதாரத்தை தூக்கிப் பிடிப்பதில் இந்த சிறு வணிகங்கள் முக்கியப் பங்கு வகித்தன. 82% வணிக உரிமையாளர்கள் சரிவை சந்தித்த நிலையில் 18% மக்கள் புதியதொரு தொழிலை தொடங்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்தினர்.

நிச்சயமாக, கோவிட்-19க்கு முன்பாகவே  வீட்டில் இயங்கிய பல வணிகங்கள் இருந்தன ஆனால் லாக்டவுன் மற்றும் மக்கள் தங்களை அதிகமாக சுயபரிசோதனை செய்தது பல புதிய வணிகங்கள் உருவாக காரணமாக இருந்தது.

பலருக்கும் வீட்டிலிருந்து தொழில் தொடங்குவது பற்றி இன்னும் பல குழப்பங்கள் இருக்கின்றது.  நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே தொடங்கக்கூடிய தொழில்கள் பற்றி அறிய மேலும் தொடர்ந்து வாசியுங்கள்.

உங்கள் சிறு வணிகத்தை தொடங்குவதற்கான வழிகள்:

நீங்கள் விரும்புவதையும் விரும்பாததையும் முறையே பிரித்தறிவது மிகவும் அவசியம். அதுவே வெற்றிக்கான முதல் படி. மேலும் தொழில் தொடங்குவதற்கான ஆராய்ச்சிகள் செய்வது, பலரை சந்தித்து நெட்ஒர்க்கை உருவாக்குவது மற்றும் தேவையான முதலீட்டை ஏற்பாடு செய்வது போன்ற முக்கிய விஷயங்களை முதலில் செய்ய வேண்டும்.

வெற்றிகரமான நிலைப்பாட்டை அடைய மிகவும் பயனுள்ள வழி குறிப்புகள் எடுத்துக்கொள்வதாகும். வணிகத்திற்கு தேவையான குறிப்புகளை எடுத்து சரியான இடத்தில் பயன்படுத்த வேண்டும்.

உங்கள் வணிகத் திட்டத்தை உருவாக்கும் போது பின்பற்ற வேண்டிய படிகள்:

  • தேவையான ஆராய்ச்சி செய்வது 
  • விரும்பும் தொழில்களை தேர்ந்தெடுப்பது
  • வணிகத் திட்டத்தை உருவாக்குவது 
  • பணியிடத்தைத் திட்டமிடுவது

பல்வேறு தொழில்கள் பற்றிய அறிவு 

எந்த தொழிலை தொடங்குவது என்பது முக்கியம். உங்களுக்கு பல விருப்பங்கள் இருக்கலாம், ஆனால் உங்களுக்கு விருப்பமான அனைத்துத் துறைகளையும் ஆராய்ந்து, எதைத் கையிலெடுப்பது என்பதை முடிவு செய்வது அவசியம்.

இந்தியா பலதரப்பட்ட மக்களைக் கொண்ட நாடு. இங்கு வாய்ப்புகள் அதிகம். நாம் அனைவரும் அறிந்தபடி, வீட்டில் இருந்து வேலை செய்வது என்பது பெரிய பன்னாட்டு நிறுவனங்களால் பின்பற்றப்படும் ஒரு வழக்கமாகிவிட்டது, மேலும் அவர்கள் அதை மேலும் தொடரவே எண்ணுகின்றனர். நீங்கள் விரும்பும் ஒன்றைத் தொடங்குவதற்கும் அதைப் பின்பற்றுவதற்கும் ஏன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தக்கூடாது?

உங்கள் அறையில் அமர்ந்து கொண்டு பல்வேறு வகையான தொழில்களை நீங்கள் தொடங்கலாம். நீங்கள் ஒரு மறுவிற்பனையாளர், உற்பத்தியாளர், பேக்கர், சமையல்காரர், ஆசிரியர் மற்றும் பலவாக உருமாறலாம். இங்கு வாய்ப்புகளுக்கு முடிவே இல்லை. உங்கள் இதயம் எதை விரும்புகிறது மற்றும் நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பது மட்டுமே முக்கியம்.

ஆன்லைன் வணிக யோசனைகள்

சமூக ஊடக நிபுணர்

உலகளவில் 4.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் சமூக ஊடகங்களில் இணைந்துள்ளனர். அதாவது வணிக உரிமையாளர்கள் இனி ஆன்லைனில் சந்தைப்படுத்துவதை தவிர்க்க முடியாது. இருப்பினும், பல வணிகங்கள் தங்கள் வணிகத்தில் செழிக்க சமூக ஊடகங்களின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தாலும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு நேரம், ஆற்றல் அல்லது அதைப்பற்றிய போதிய அறிவு இல்லாமல் இருக்கிறது.

அன்றாட பொழுதுபோக்கிற்காக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது ஒவ்வொரு பயனரும் செய்யும் ஒரு விஷயம் தான். ஆனால் அந்த பொழுதுபோக்கைப் வணிகத்திற்காக பயன்படுத்த எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? நீங்கள் வழக்கமாகப் பார்க்கும் விஷயங்களில் இருந்து கற்றுக்கொண்டு குறிப்புகளை எடுத்துக்கொள்ளவும்.

நீங்கள் ஒரு சமூக ஊடகப் புழுவாக இருந்தால், அதிலிருந்து ஏதாவது ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பு இதோ. இந்த பிளாட்ஃபார்ம்களின் அல்காரிதங்களைப் பற்றி அறிந்து, எப்படி எல்லாம் வேலை செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும். சமூக ஊடகமானது தினசரி சுகாதாரம் மற்றும் செயல்திறன் சந்தைப்படுத்தல் ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது, இது கற்றுக்கொள்ளவும் சுவாரஸ்யமான ஒரு விஷயமாக இருக்கும். நீங்கள் இதை விரும்பி ஆராயத் தொடங்கினால், அதே வணிகம் உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக அமையவும் வாய்ப்புள்ளது.

உங்கள் உத்வேகத்திற்கான ஒரு கதை – 6 பேர் கொண்ட குழுவுடன் மும்பையில் தொடங்கப்பட்ட சிறிய டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சியான ரெபேக்கா டிஜிட்டல் நிறுவனத்தின் உரிமையாளரான ரஷ்மிதா சாஹு 2022 இல் இந்த நிறுவனத்தைத் தொடங்கி தனது வாடிக்கையாளர்களின் வளர்ச்சியை நோக்கிச் செயல்பட்டு வருகிறார்.

மறுவிற்பனை

உங்கள் வீட்டிற்கு வெளியே உள்ள கடைகள் மற்றும் வியாபாரிகள் மறுவிற்பனையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். உங்கள் அன்றாட வாழ்வில் இதே விஷயத்தை ஏன் செயல்படுத்தக்கூடாது மற்றும் அதை ஏன் உங்கள் வீட்டிலிருந்தே செய்யக்கூடாது?

உங்கள் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதன் அடிப்படையில் அதிகம் விற்கக்கூடிய பொருத்தமான தயாரிப்புகளைக் கண்டறிவது முக்கியம். இது நோட்டு புத்தகங்கள் போல் எளிமையானதாகவோ அல்லது ஆடம்பர ஆடைகளை விற்பதாகவோ இருக்கலாம்.

உதாரணத்திற்கு, நெக்கி இந்தியா நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் திருமதி டாலி கிச்சாவால் நிறுவப்பட்டது, இப்போது இன்ஸ்டாகிராமில் 49,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட சமூகமாக உள்ளது. அத்தகைய பெண்களால் ஈர்க்கப்பட்டு இன்று சிறு வணிக உரிமையாளராக உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள்.

யோகா பயிற்சியாளர்

நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவது அவசியம். குறிப்பாக ஜிம் அல்லது யோகா மையம் உங்கள் வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருந்தால் அங்கு செல்ல நேரம் கிடைப்பது கடினம். யோகா தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நாட்களில் மக்கள் ஜிம்மில் கடினமான உடற்பயிற்சிகளை தவிர்க்க யோகாவை தேர்வு செய்கிறார்கள். நீங்கள் இந்தத் துறையில் ஏதாவது செய்ய ஆர்வமாக இருந்தால் ஆன்லைன் யோகா வகுப்புகளைத் தொடங்குவது ஒரு சிறந்த யோசனையாகும்.

ரோகினி ஐயர் ஒரு யோகா பயிற்றுவிப்பாளர் ஆவார். முதலில் அவர் வீட்டிலேயே வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார், இப்போது சென்னையில் தனக்கென சென்னை யோகா ஸ்டுடியோ என்ற பிரபலமான ஒரு ஸ்டுடியோவைக் தொடங்கியுள்ளார். சென்னை அவார்ட்ஸின் 2022 ஆம் ஆண்டுக்கான ஃபிட்னஸ் சூப்பர் ஸ்டார் விருதையும் தட்டிச் சென்றுள்ளார்.

உணவுத் துறை வணிக யோசனைகள்

கேட்டரிங்

திருமணமாக இருந்தாலும் சரி பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது எந்த ஒரு சம்பிரதாய நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, இந்த நாட்களில் கேட்டரிங் சேவைகளுக்கு அதிக தேவை உள்ளது. உங்களிடம் நல்ல சமைக்கும் திறன்கள் இருந்தால் மற்றும் குறைந்த உதவிக் கரங்களுடன் அழுத்தத்தின் கீழ் வேலை செய்ய முடிந்தால், கேட்டரிங் வணிகம் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம். நன்கு அறியப்பட்ட கேட்டரிங் நிறுவனமாக இருக்க, நீங்கள் பல்துறை திறன் கொண்டவராக இருக்க வேண்டும். தெளிவாக கூறுவதானால், வேலையாட்களை நன்கு நிர்வகிக்க வேண்டும், வெவ்வேறு சமையல் முறைகள், வெவ்வேறு உணவுகள் மற்றும் பலதரப்பட்ட  மக்கள் விரும்பும் நவநாகரீக உணவுகள் போன்ற அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

திருமதி அருணா விஜய் கேட்டரிங் தொழில் செய்யும் ஒரு டிஜிட்டல் படைப்பாளி ஆவார். அவர் மாஸ்டர்செஃப் சென்னை 2022 விருதை வென்றுள்ளார். சென்னையில் வெற்றிகரமான மற்றும் புகழ்பெற்ற சமையல்காரான அவர் அனைத்து குடும்பக் நிகழ்ச்சிகள் மற்றும் விசேஷங்களுக்கு கேட்டரிங் சேவை வழங்குகிறார்.

பேக்கிங்

பேக்கிங் செய்யும் திறமை இருந்தால் வீட்டிலேயே பேக்கரி தொடங்கலாம். நீங்கள் ரொட்டி, கேக்குகள், பேஸ்ட்ரிகள், பன்கள் மற்றும் கப்கேக்குகளை செய்து விற்கலாம். வெவ்வேறு பதார்த்தங்களை முயற்சி செய்து நீங்கள் எதில் சிறந்தவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பேக்கரி வணிகம் வளர்ந்து வரும் ஒரு துறையாகும். அத்தகைய வணிகத்திற்கு முதலீடு மிகவும் தேவையான காரணியாகும். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பேக்கிங் செய்வதைத் தொடங்குங்கள் அதன் மூலம் புதிய ஆர்டர்கள் எடுக்கத் தொடங்கலாம். இவ்வாறாக படிப்படியாக உங்கள் பேக்கிங் தொழிலை முன்னெடுத்துச் செல்லலாம்.

பெங்களூரைச் சேர்ந்த திருமதி மோனிஷா பிரகாஷ் ஒரு பேக்கர் ஆவார். அவர் மலர் வடிவ கேக்குகளை செய்வதில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அவரது நிறுவனத்தின் பெயர் மோ மேட் பாடிசெரி மற்றும் எல்எல்பியின் சிறந்த இனிப்பு பஜார் 2019 என்ற பட்டத்தையும் வென்றுள்ளார்.

பார்சல் உணவு விற்பனை 

நீங்கள் சமைப்பதில் வல்லவராக இருக்கலாம், ஆனால் கேட்டரிங் வணிகத்தை நடத்துவதற்கான நிறுவனத் திறன்கள் அல்லது வாய்ப்புகள் அமையவில்லை எனில் உங்கள் சமையலறையில் இருந்து கொண்டே லாபகரமான பார்சல் உணவு விற்பனை வணிகத்தை உருவாக்குவது ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஆம், வீட்டில் சமைத்த உணவை விற்க உங்களுக்கு பெரும்பாலும் ஒரு உரிமம் தேவைப்படும், ஆனால் ஒரு செழிப்பான டேக்அவே/உணவு வணிகத்தைத் தொடங்க உங்களுக்கு ஒரு பெரிய வணிக சமையலறை தேவையில்லை.

குர்விந்தர் கோச்சார் மும்பையில் அமைந்துள்ள ஸ்பைஸ் பாக்ஸின் உரிமையாளர். அவர் தனது மெனுவில் 250+ ரெசிபிகளை வைத்துள்ளார் மற்றும் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் ஆர்டர்களை எடுக்கிறார். அவர் 2018 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் மூலம் தனது வணிகத்தைத் தொடங்கினார், அவரது மகன் குர்மீத் கோச்சாரின் உதவியுடன் அவர் தனது சொந்த வலைத்தளத்தை உருவாக்கி இப்போது மும்பை முழுவதும் பார்சல் உணவு விநியோகம் செய்கிறார்.

உலர் பழங்கள் மற்றும் நம்கீன் (மிக்சர்) தயாரித்தல்

நீங்கள் ஒரு இந்தியராக இருந்தால், உங்கள் வாழ்க்கையில் உலர் பழங்கள் மற்றும் நம்கீன்களின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிவீர்கள். அனைத்து குழந்தைகளுக்கும் நிச்சயமாக உணவில் ஏதோ ஒரு ட்ரை ஃப்ரூட்ஸை சேர்க்கிறோம். மிக்சரை கொண்டே பல நேரம் உணவருந்தியிருப்போம். 

இந்த ஆரோக்கியமான தின்பண்டங்களை எல்லா வயதினரும் சாப்பிடுகிறார்கள், மேலும் இது நாட்டின் மிகப் பிரபலமான உணவுப் பொருளாகும்.

நீங்கள் இனிப்புகள் மற்றும் காரங்களை சமைப்பதில் வல்லவராக இருந்தால், இதுவே உங்கள் முக்கிய தொழில். உங்களின் இந்த ஆர்வத்தை லாபகரமான வணிகமாக மாற்றலாம்.

தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் இவை அதிகம் உட்கொள்ளப்படுகின்றன. இது இந்த பண்டிகை களங்களில் ஒரு ஆண்டின் மொத்த விற்பனையில் 40% இந்த உணவுப் பொருட்கள் அடக்கம்.

2008 ஆம் ஆண்டு தனது தந்தையின் டிரை ஃப்ரூட் மற்றும் நம்கீன் பிசினஸ் நிறுவனத்திற்கு உதவுதற்காக கல்லூரியை விட்டு வெளியேறிய திரு ஜெனிஷ் ஜெயின் தங்கள் நிறுவனமான  அசால்தாஸ் & சன்ஸ் நிறுவதனை மதிப்புமிக்க ஒரு பிராண்டாக மாற்றி வணிக ரீதியாக பல  மைல்கற்களை எட்டவைத்துள்ளார்.

வெகுஜன உற்பத்தி வணிக யோசனைகள்

வீட்டில் தயாரிக்கப்படும் சாக்லேட்டுகள்

கிட்டத்தட்ட அனைவருக்கும் சாக்லேட் பிடிக்கும், நீங்கள் சாக்லேட் செய்ய விரும்பினால், உங்கள் தொழிலைத் தொடங்க இது ஒரு நல்ல இடம். சாக்லேட் வணிகமானது குறைந்தபட்ச முதலீட்டை உள்ளடக்கியது, முதலீடு என்பது நீங்கள் எவ்வளவு பெரிய அல்லது சிறியதாக தொடங்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. சாக்லேட் பிரியர்கள் புதிய சுவைகள் மற்றும் மாறுபாடுகளை முயற்சிக்க விரும்புகிறார்கள். இந்த நாட்களில் மக்கள் ரசாயன பொருட்களை விட வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அதிகம் விரும்புகிறார்கள். அந்த வகையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகளை விரும்புகிறார்கள். வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகள்  ஆரோக்கியமானது மற்றும் சுவையானது. அதனால் சந்தையில் அதன் தேவை அதிகம். விடுமுறை நாட்களில் மக்கள் ஒருவருக்கொருவர் சாக்லேட்டுகளை வழங்குவது வழக்கம். அது போன்ற சமயங்களில் வீட்டில் தயாரித்த சாக்லேட்டுகளின் தேவை இன்னும் அதிகரிக்கிறது.

திருமதி ஸ்ரேயா அகர்வால், கேக் மற்றும் கப்கேக்குகள் செய்வதன் மூலம் தனது பேக்கரியைத் தொடங்கினார். இன்று அவரது சாக்லேட்டுகள் தீபாவளியின் போது அதிகம் விற்பனையாகும் சாக்லேட்டுகளாகும். அவர் கோகோ க்ரஸ்ட் நிறுவனத்தை தொடங்கி 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையில் நிலைத்துள்ளார். எல்லா இடங்களிலும் உத்வேகத்தைத் தேடுங்கள் உடனடியாக செயலில் இறங்குங்கள். வயது எப்போதும் ஒரு தடையில்லை.

மெழுகுவர்த்தி தயாரித்தல்

இந்த நாட்களில் பளிச்சிடும் மெழுகுவர்த்திகளுக்கு அதிக தேவை இருப்பதால் இந்த தொழிலை தொடங்குவது ஒரு ஸ்மார்ட் யோசனையாகும். மக்கள் மத வழிபாடுகளுக்காக மட்டுமின்றி அலங்காரத்திற்காகவும் மெழுகுவர்த்திகளை ஏற்றுகிறார்கள். அழகான மணம் கொண்ட மெழுகுவர்த்திகளை தயாரித்து ஆன்லைனில் விற்கலாம் அது  மட்டுமல்லாமல் ஹோட்டல் மற்றும் உணவகத் துறையினரும் இவற்றை அதிகம் வாங்குவார்கள். ஒரு நல்ல இதமான சூழலை உருவாக்க வாசனை மெழுகுவர்த்திகளை அதிகம் வாங்குகிறார்கள்.

தி கேண்டில் ஸ்டோரி நிறுவனம் தயாரிக்கும் விசித்திரமான மெழுகுவர்த்திகள் ஒரு சிறந்த வெற்றி வணிகத்தின் உதாரணமாகும். இதே போன்ற தொழில்களை பற்றி அறிந்து அவற்றில் உத்வேகம் தேடுங்கள்.

கையால் செய்யப்படும் குக்கீகள்

நீங்கள் பேக்கிங்கை ரசிக்கிறீர்கள் என்றால் குக்கீகளை தயாரிப்பது ஒரு சிறந்த வணிகமாக இருக்கும். வெவ்வேறு நபர்கள் புதிய சுவைகளைத் தேடுகிறார்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட குக்கீகளை விட வீட்டில் தயாரிக்கப்பட்ட குக்கீகளை விரும்புகிறார்கள். இந்த வகை வணிகத்திற்கு மிகக் குறைந்த அளவிலேயே முதலீடு தேவைப்படுகிறது. சிறிய இடம், குறைந்த மூலப்பொருட்கள் மற்றும் பணியாளர்கள் தேவைப்படுவதன் காரணமாக இது மிகவும் இலாபகரமான சிறு தொழில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு பேக்கரி வணிகத்தில் வெற்றிபெற, நீங்கள் சந்தைப்படுத்துதலில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் உங்கள் வாடிக்கையாளர்கள் விரும்பும் சுவைகளை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பேக்கரும் குக்கீகளை பேக்கிங் செய்வார்கள், ஆனால் ஓரியோவை சிறப்பாகப் பயன்படுத்திய ஒருவரைப் பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? திரு விகாஸ் தனது மற்ற மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ஓசிடி என பிரபலமாக அறியப்படும் ஓரியோ கம்பல்சிவ் டிஸார்டரை சென்னையில் தொடங்கினார். அவர்கள் ஓரியோ பிஸ்கட்களை அடிப்படை மூலப்பொருளாகப் பயன்படுத்தி பல்வேறு வகையான குக்கீகள் மற்றும் இனிப்புகளை உருவாக்குகிறார்கள். இது போல உங்களுக்கு விருப்பமானவற்றைப் பார்த்து இன்றே தொடங்குங்கள்.

நகை தயாரித்தல்

இமிடேஷன் எனப்படும் போலி நகைகள் தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் ஃபேஷன் ஆகும். மேலும், பெண்கள் தங்கள் தன்னம்பிக்கை மற்றும் அழகை மெருகேற்ற இத்தகைய நகைகளை விரும்புகிறார்கள். எனவே, அவர்கள் தங்களுக்கென வடிவமைக்கபட்ட நகைகளை வாங்க விரும்புகிறார்கள். நீங்கள் இந்தத் துறையில் நுழைய விரும்பினால் இந்த வணிகத்தின் போக்குகளைக் கண்காணித்து உங்கள் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி பெண்களுக்கேற்ற நகைகளை உருவாக்க வேண்டும். தங்கம், வைரம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு காரணமாக நகைகள் தயாரிக்கும் வணிகம் மேலும் மேலும் பிரபலமடைந்து வருகிறது. நீங்கள் இந்த நகைகளை வடிவமைத்து தயாரித்து ஆன்லைனில் விற்கலாம், சிறிய கடையைத் திறக்கலாம் அல்லது வியாபாரிகளுக்கு மொத்த விற்பனை செய்யலாம். இந்த வணிகத்திற்கு குறைந்தபட்ச முதலீடே தேவைப்படுகிறது, மேலும் இந்த வேலையை முதலில் வீட்டிலிருந்து தொடங்கலாம்.

திருமதி நிக்கோல் ரெஸ்சிங் ப்ளூம்ரெசின் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். லாக்டவுன் காலத்தில் கலைஞர்களாக இருந்த தனது தாத்தா மற்றும் பாட்டியின் உத்வேகத்தைப் பெற்று அவர் தொழிலைத் தொடங்கினார். அவர் இன்று தனது நகை தயாரிப்பில் வெற்றி பெற்று அதை மேலும் வளர்க்க வேண்டுமென கனவு காண்கிறார்.

உத்வேகம் பெறுவதற்கான வெற்றிகரமான வணிக யோசனைகள்

யுவர் ஸ்டோரி 

தைரியம் மற்றும் விவேகம் நிறைந்த ஆளுமை, ஷ்ரதா ஷர்மா, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் சிஎன்பிசி (மும்பை) போன்ற புகழ்பெற்ற செய்தி நிறுவனங்களில் பணிபுரிந்து தனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தை எட்டினார். இந்த நிறுவனத்தில் பணிபுரியும் போது, வெற்றிகரமான மற்றும் தோல்வியுற்ற தொழில்முனைவோரின் கதைகளை விளம்பரப்படுத்தவும் ஒளிபரப்பவும் யாரும் விரும்பவில்லை என்பதை அவர் அறிந்தார். மில்லியன் கணக்கான கதைகள் புழக்கத்தில் இருப்பதை அவர் உணர்ந்தார், ஆனால் அவற்றைப் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள அவருக்கு சிறந்த தளம் அமையவில்லை. எனவே ஷ்ரதா யுவர்ஸ்டோரி என்ற ஆன்லைன் போர்ட்டலை உருவாக்க முடிவு செய்தார், அங்கு அவர் கார்ப்பரேட் கதைகள் மற்றும் பிற உள்ளடக்கங்களைப் பகிரத் தொடங்கினார்.

யுவர்ஸ்டோரி 2008 இல் வெளியிடப்பட்டது. 70,000 க்கும் மேற்பட்ட கதைகளை வெளியுலகுக்கு கொண்டு வந்துள்ளது. 11 இந்திய மொழிகளில் இயங்கும் 100 பேர் கொண்ட குழுவை ஷ்ரதா சர்மா வழிநடத்துகிறார். யுவர்ஸ்டோரியின் குறிக்கோள், தொழில்முனைவோர் கடந்து செல்லும் உணர்ச்சிகரமான ரோலர்கோஸ்டர் பயணத்தை உங்களுக்கு தெரியப்படுத்துவதாகும். ஷ்ரத்தா ஷர்மா லோரியல் பாரிஸ் ஃபெமினா விருதைப் பெற்றுள்ளார் மற்றும் லிங்க்ட்இனின் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 500 நபர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவில் மிகவும் பிரபலமான பெண் தொழில்முனைவோர்களில் ஒருவர்.

க்ரோஃபர்ஸ்

மளிகை, பேக்கரி மற்றும் பொது அங்காடி சேவைகளை ஒருங்கிணைந்த தளம் மூலம் வழங்க அல்பிந்தர் திந்த்சா விரும்பினார். இந்தியாவில் உள்ள ஆன்லைன் மளிகைக் கடையான க்ரோஃபர்ஸில் அவரது கனவு நனவாகியது. அல்பிந்தர் திண்ட்சா மற்றும் சௌரப் குமார் ஆகியோர் க்ரோஃபர்ஸ் நிறுவனத்தை நிறுவினர். இந்தியாவின் ஆன்லைன் டெலிவரி முறைக்கு புதிய யோசனைகளைக் கொண்டுவர இருவரும் கடுமையாக உழைத்தனர். இன்று, க்ரோஃபர்ஸின் மதிப்பு சுமார் $650 மில்லியன். இந்நிறுவனம் தற்போது பி2பி வணிக மாதிரியிலிருந்து பி2சி வணிக மாதிரிக்கு மாறியுள்ளது. 2014 ஆம் ஆண்டில் டெல்லி மற்றும் குர்கானில் உள்ள முதல் 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பட்டியலில் க்ரோஃபர்ஸ் இடம் பிடித்தது.

மம்மிஸ் கிச்சன்

லாக்டவுன் பலருக்கு சொந்தமாக ஏதாவது ஒரு தொழிலை தொடங்க தூண்டியுள்ளது. 67 வயதில் சில கடினமான முடிவுகளை எடுத்தவர்களில் திருமதி பிரதிபாவும் ஒருவர். திருமதி பிரதிபா தனது பேரக்குழந்தைகள் வெளி உணவுகளை உன்ன முடியாமல் தவித்ததை கண்டார். எனவே அவர்களுக்காக சுவையான பீட்சாவை சமைக்கத் தொடங்கினார். மம்மிஸ் கிச்சன் அங்கீகாரம் பெற்ற தொழிலாக மாறியது மேலும் 10 நாட்களில் 100க்கும் மேற்பட்ட பீட்சா ஆர்டர்களைப் பெற்றார்.

வீட்டுத் தொழிலைத் தொடங்குவதன் நன்மைகள்

நீங்களும் பல வேலைகள் செய்யலாம் – எலோன் மஸ்க்கைப் போல் உணருங்கள்!

வீட்டில் இருப்பது உங்கள் வேலையை மிகவும் எளிதாகவும் எளிமையாகவும் ஆக்குகிறது. வீட்டிலிருந்து வேலை செய்வது உங்கள் பணி அட்டவணையைத் தாண்டிச் செல்ல உங்களை அனுமதிக்கிறது மற்றும் பல விருப்பங்களை ஆராய உங்களை அனுமதிக்கிறது.

அற்புதமான வரிச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

வரிவிதிப்பு பற்றி அறிந்து கொள்ளுங்கள், இதில் நீங்கள் நிறைய சேமிக்க முடியும். உங்கள் வருமானத்தில் உங்கள் வீட்டுச் செலவுகளைக் கழிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில வரிச் சலுகைகள்:

  • வணிகத்தின் முதல் மூன்று ஆண்டுகளுக்கு வரியிலிருந்து 100% விலக்கு.
  • மூலதன ஆதாயத்தில் 20% விலக்கு.
  • தனிப்பட்ட கார் உபயோகத்தை வணிகச் செலவுகளாக எழுதலாம்.

நிலையான வேலை நேரம் இல்லை – உங்கள் சொந்த முதலாளியாக இருங்கள்!

பொதுவாக, வேலைகள் 9-5 வகை. ஆனால் உங்கள் சொந்த வணிகத்தை வைத்திருப்பது மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வது உங்கள் நேரங்களை உங்களுக்கு ஏற்றபடி அமைத்துக் கொடுக்கிறது. நீங்களே உங்கள் முதலாளி என்பதால், நீங்கள் எப்போது வேலை செய்ய வேண்டும் மற்றும் உங்கள் வசதியான முறையில் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.

தனிப்பட்ட நேரம் – நீங்கள் உங்கள் இடத்தைப் பெறுவீர்கள்

9-5 வேலைகள் வாரம் முழுவதும் பரவி வருவதால், ஒரு நிலையான வழக்கத்தை வைத்திருப்பது பெரும்பாலும் ஒருவரை தங்கள் குடும்பத்தினருடன் இருக்கவோ அல்லது தங்களுக்கென செலவிடவோ வழி இருக்காது. வீட்டிலிருந்து இயங்கும் உங்கள் சொந்த வியாபாரத்தில் நீங்கள் குடும்பத்துடன் செலவழிக்க மற்றும் உங்கள் மீது கவனம் செலுத்த நேரம் அமைகிறது.

குறைந்த செலவு – உங்களுக்கு பொருளாதார ரீதியாக எளிதானது

இத்தகைய வணிகங்களுக்கு பெரும்பாலும் குறைந்த முதலீடு தேவைப்படுகிறது, அதாவது நீங்கள் வீட்டிலிருந்து செயல்படும் போது வாடகை, மின்சாரம் மற்றும் கிடங்கு ஆகியவற்றின் செலவு எதுவுமே இருக்காது. ஒரு சிறந்த பணிச்சூழலுடன் உங்கள் வேலையைத் தொடரலாம். அது உங்கள் மாத வருமானத்திற்கு உதவும்.

வீட்டு வணிகங்களின் தீமைகள் மற்றும் அவற்றைச் சுற்றி நீங்கள் எவ்வாறு வேலை செய்யலாம்!

கிரியேட்டிவ் பிளாக்

சில நேரங்களில் தனியாக வேலை செய்வது பல வழிகளில் உங்களைத் தாழ்த்தலாம். சுற்றி இருப்பவர்கள் உங்கள் வேலை சூழலை மாற்றுகின்றனர். மற்றவர்களுடன் கலந்தாலோசிப்பது சிறந்த யோசனைகளை வெளிக்கொணரும்.

யோசனை தடைகளை போக்க உங்கள் போட்டியாளர்களைப் பார்த்து ஆக்கப்பூர்வமான யோசனைகளைப் பெற அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கவும். இதைச் செய்வதற்கான சிறந்த வழி பின்டெரெஸ்ட் மூலம் பார்க்க வேண்டும்.

வீட்டில் தொந்தரவுகள்

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள் சுற்றி இருப்பது சில நேரங்களில் தொந்தரவு தரும் மற்றும் கவனத்தை சிதறடிக்கும். குடும்பம் மற்றும் தொழிலை குழப்பிக்கொள்ள வாய்ப்புண்டு.

மிகவும் தொந்தரவு ஏற்பட்டால் வேலையிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். தொந்தரவு தரும் இடத்தில் வேலை செய்வது உங்கள் திறனை பாதிக்கலாம். வீட்டில் அமைதி நிலவும் போது தான் நீங்கள் நன்றாக வேலை செய்ய இயலும்.

பொறுப்பு உங்களுடையது 

ஒரு வணிகத்தை சொந்தமாக வைத்திருப்பது ஒரு அற்புதமான உணர்வு. ஆனால் இதனுடன் பொறுப்பும் வருகிறது. நடக்கும் அனைத்து நல்ல மற்றும் கெட்ட விஷயங்களுக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பு.

பாதுகாப்பாக இருக்க எப்போதும் சரிபார்ப்புப் பட்டியலை வைத்திருங்கள். என்ன வேலைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது மற்றும் நிலுவையில் உள்ளது என்பதை அறிவதன் மூலம் நீங்கள் குழப்பமடையாமல் இருக்க உங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தெளிவான யோசனை உங்களுக்கு கிடைக்கும்.

குறைந்த நம்பகத்தன்மை

தனியாக வேலை செய்வது வேடிக்கையானது இல்லை. உங்களுக்கு விடுமுறை தேவைப்படும் நாட்கள் வரலாம் ஆனால் வேலையின் காரணமாக உங்களால் அதை எடுக்க முடியாது, மேலும் உங்களுக்கு பதில் வேலை செய்ய யாரும் இருக்கமாட்டார்கள். இது போன்ற விஷயங்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். திட்டமிடப்படாத இடைவெளிகள் ஆபத்துகளை கொண்டுவரும்.

திட்டமிடல்தான் முக்கியம். உங்கள் வேலையை எப்போதும் சரியான பாதையில் செலுத்த திட்டமிடுங்கள். ஒழுங்கமைக்கப்பட்டிருப்பது முழு உற்பத்தித்திறனுடன் பணிபுரிய உதவும், மேலும் சில ஓய்வுக்கான இடைவெளிகளைப் பெறவும் உதவும்.

விரிவாக்கம் வரையறுக்கப்பட்டுள்ளது

உங்கள் வணிகம் சீராக இயங்கி அதிசயங்களைச் செய்து கொண்டிருந்தால், அதை விரிவாக்க நீங்கள் திட்டமிடலாம். விரிவாக்கம் என்பது அதிக இடம் தேவைப்படும் மேலும் பணியாளர்களை பணியமர்த்த வேண்டி வரும். பெரிய இடம் என்பது வீட்டை விட்டு வெளியேறி, கூடுதல் முதலீடுகளை உள்ளடக்கிய புதிய இடத்தைக் கண்டுபிடிப்பதாகும்.

உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த நீங்கள் திட்டமிட்டால், உங்கள் வணிகத்தைக் கையாள்வதில் ஆர்வமுள்ள கூட்டாளர்களைத் தேடுங்கள். உதவிக்கு ஆள் இருப்பது எப்பொழுதும் உதவும் இதனால் நீங்கள் பாதி சுமையின்றி இருக்க முடியும்.

முடிவுரை

ஒரு புதிய சிறு வணிக முயற்சியைத் தொடங்குவது மிகவும் உற்சாகமாகவும் அதே நேரத்தில் பதட்டமாகவும் இருக்கும். உங்களிடம் தேவையான அனைத்து உபகரணங்களும் தகுதிகளும் இருப்பதை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும் மேலும் அவர்களைத் தேடுவதற்கும் உயர்தர சேவையை வழங்குவதையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் அற்புதமான சிறு வணிக யோசனைகளை ஆராயும் போது, முடிந்தவரை அதிக பணம் சம்பாதிப்பதை விட வெற்றிகரமான வணிகத்தை உருவாக்குவது மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்வது அவசியம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் ஆர்வம் இருக்க வேண்டும். இல்லையெனில், மக்கள் தவிர்க்க முடியாமல் உங்கள் போட்டியாளர்களிடம் திரும்புவார்கள்.

ஆனால் உங்களுக்கு இருக்கும் நேரத்திற்கு ஏற்ற சரியான யோசனை, ஆர்வம் மற்றும் நிதி ரீதியாக நல்ல யோசனையை நீங்கள் கண்டறிந்தால், நீங்கள் பெருமைப்படக்கூடிய வெற்றிகரமான சிறு வணிக சாம்ராஜ்யத்தை நோக்கி முதல் படியை எடுக்க தயாராவீர்கள்.

This post is also available in: English Tamil

Share:

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Subscribe to Newsletter

Start a business and design the life you want – all in one place

Copyright © 2022 Zocket